உலக இரத்த தான தினம்


    உலக இரத்த தானம் தினம் 
உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ரத்த தானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும் பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள். விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது. அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே ரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக ரத்த தானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை ரத்த தானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

Comments