கடல் திடீரென பச்சை நிறமாக மாறியது கடல் உயிரினங்கள் உயிரிழப்பு
தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா, கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது. இந்த பகுதியில் மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 12 வகை கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் வாழ்ந்து வருகின்றன.இந்தநிலையில், ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் மண்டபம் முதல் வேதாளை வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்து கரை ஒதுங்கத் துவங்கி உள்ளன. இதனால் பாம்பன் முதல் வேதாளை வரையிலாக கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசுவதுடன், கடல்நீர் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது
இப்பகுதிகளில் மீன் பிடித்தொழில் செய்து வரும் மீனவர்கள், கடல் நீர் நிறம் மாற்றம் குறித்து மரைக்காயர் பட்டிணத்திலுள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜெயராஜ் கூறுகையில்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பூங்கோரை என்று அழைக்கப்படும் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும்.
இந்த பாசிகள் கடலில் படரும் போது கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த பாசிகள் படர்வதால், பாறைகளில் வசிக்கக் கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்த வகையான பாசிகளில் விஷத் தன்மை இல்லை.
இறந்த மீன்களை நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்விதமான தீங்கும் இல்லை. இரண்டு வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். இதனால் மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜெயராஜ் தெரிவித்தார்

Comments
Post a Comment